டெல்லி:நாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நன்னாளை முன்னிட்டு, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் பேசினார். அப்போது, பெண்களுக்கு எதிராக நிகழும் வன்கொடுமைகள் குறித்து தாம் மனவேதனை அடைவதாக மோடி தெரிவித்தார்.
"பெண்களுக்கு எதிராக நாட்டில் நிகழும் வன்கொடுமைகள் குறித்த எனது மனவேதனையை மீண்டுமொருமுறை டெல்லி செங்கோட்டையில் இருந்து தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அட்டூழியங்களை நாம் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த நாடு, சமூகம் மற்றும் மாநில அரசுகள் இந்த விஷயத்தை தீவிரமாக கருதி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று மோடி வலியுறுத்தினார்.
"பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்த வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு, இக்கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனைகள் விரைந்து அளிக்கப்பட வேண்டும். யாரும் இனி இதுபோன்ற குற்றங்களை செய்ய துணியாத அளவுக்கு அந்த தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும்" என்று பிரதமர் வலியுறுத்தினார்.