பாட்னா: பீகார் மக்களுக்கு ஒரு புதிய அரசியல் தேர்வாக, தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், இன்று தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளார்.
பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெறும் மெகா நிகழ்வில் பிரசாந்த் கிஷோர் தனது கட்சியின் பெயர், கொள்கை மற்றும் கட்சியின் தலைவர், 25 பேர் கொண்ட தலைமைக் குழு ஆகியவற்றை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். புதிதாக அறிவிக்கப்பட உள்ள கட்சியில் தான் எந்த பதவியையும் வகிக்கப் போவதில்லை என்றும், தனது தற்போதைய பாதயாத்திரையில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாகவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
'ஜன் சுராஜ்' என்ற பெயரில் இவர் மேற்கொண்டு வரும் பிரசார பாதயாத்திரை சுபாலில் நிறைவடைய உள்ளது. கட்சி அறிவிப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் அராரியா நோக்கி பிரசாந்த் கிஷோர் செல்ல உள்ளார். இன்றைய கட்சி அறிவிப்பு நிகழ்ச்சிக்கு 50 லட்சம் ஆதரவாளர்கள் வரை வருவார்கள் என ஜான் சுராஜ் தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர். லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் பாஜக போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் பீகாரில் நீண்டகாலமாக உள்ள சாதி, மத அரசியலில் பிரசாந்த் கிஷோரின் குரலும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் புதிய கட்சி துவங்குவது குறித்து பிரசாந்த் கிஷோர் நேற்று கூறுகையில், "ஜான் சுராஜ் மாற்றுக் கட்சியாக உருவெடுக்கும். பீகாரில் கடந்த 25 முதல் 30 ஆண்டுகளாக மக்கள் ஆர்ஜேடி அல்லது பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனர். இந்த நிர்பந்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மாற்று கட்சியானது வம்சாவளி சேர்ந்த கட்சியாக இருக்கக் கூடாது. ஆனால் அதை உருவாக்க விரும்பும் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.