பாட்னா :பீகாரில் ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகா ஜேடியு - ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறிந்தது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை மாநில அளுநரிடம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நிதிஷ் குமார் வழங்கினார்.
தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த நிதிஷ் குமார், அன்று மாலையே மீண்டும் பீகார் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை முதலமைச்சர்களாக பாஜகவை சேர்ந்த விஜய் குமார் சின்ஹா மற்றும் சாம்ராட் சவுத்ரி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், பதவியேற்பின் போது நிதிஷ் குமாருடன் சேர்த்து 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, நிதிஷ் குமார் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 29ஆம் தேதிக்குள் மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடத்தி முடிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டன.
இந்நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் மாநிலத்தில் முழு அமைச்சரவை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு உள்துறை பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நிதித் துறை மற்றும் சுகாதாரம் பாஜக வசம் சென்று உள்ளது. நிதி அமைச்சராக மாநில பாஜக தலைவரும், துணை முதலமைச்சருமான சாம்ராட் சவுத்ரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதற்கு முன் ஆர்ஜேடியுடனான கூட்டணியின் போது நிதி மற்றும் சுகாதாரம் அக்கட்சியின் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு துணை முதலமைச்சர் விஜய்குமார் சின்ஹாவுக்கு விவசாயம், சாலை கட்டுமானம், வருவாய் மற்றும் நில சீர்திருத்தம் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மூன்றாவதாக பாஜகவை சேர்ந்த மற்றொரு தலைவர் பிரேம் குமாருக்கு கூட்டுறவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய அமைச்சரவை முழுமை அடைந்து உள்ள நிலையில், விரைவில் பட்ஜெட் கூட்டத் தொடரை மாநில அரசு எதிர்நோக்கி காத்திருக்கிறது.
இதையும் படிங்க :இண்டிகோ விமான ஊழியர்களால் கசப்பான நிகழ்வு - பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ் புகார்!