புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே அடுத்த வாஷிம் மாவட்ட துணை ஆட்சியர் பூஜா கேத்கரின் தாயார், கையில் துப்பாக்கியுடன் விவசாயி ஒருவரை மிரட்டுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் கூறுகையில், பூஜா கேத்கரின் தந்தை திலீப் கேத்கர் அரசுப் பணியில் இருந்த போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொந்தமாக நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் அவர் சொந்தமாக நிலங்களை வாங்கிக் குவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் தான் புனே மாவட்டத்தின் முல்ஷி தெஹ்சில் பகுதியில் 25 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும், அருகில் இருந்த விவசாயிகளின் இடங்களையும் ஆக்கிரமிக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், தான் பூஜா கேத்கரின் தாய் மனோரமா கேத்கர் பவுன்சர்களின் உதவியுடன் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு விவசாயிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விவசாயிகள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முயன்றும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை எனக் தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் பூஜா கேத்கரின் வழக்கறிஞர் ரவீந்திர சுதர் கூறுகையில், வைரல் வீடியோ கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்டது என்றும் முல்ஷி தெஹ்சில் பகுதியில் உள்ள 25 ஏக்கர் நிலம் கேத்கர் குடும்பத்திற்கு சொந்தமானது, அந்த இடத்திற்கு செல்ல முயன்ற போது மனோரமா கேத்கரை அங்குள்ள விவசாயிகள் தடுக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.