லடாக்: கடந்த 1999ஆம் ஆண்டு இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளை விரட்டிய கார்கில் போர் நினைவு தினம் இன்று (ஜூலை.26) அனுசரிக்கப்படுகிறது. கார்கில் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களை நினைவு கூறும் வகையில் இன்று விஜய் திவாஸ் நினைவு கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 1999ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் எல்லையான கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் படைகள் முயற்சித்த போது இந்திய ராணுவ வீரர்கள் தங்களது உயிரை துச்சமென கருதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர். ஏறத்தாழ 2 மாதங்களுக்கு மேல் நடைபெற்ற போரில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 527 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
மேலும், ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்திய வீரர்களின் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி விஜய் திவாஸ் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.
கார்கில் யுத்தத்தின் 25வது வெற்றி தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. 25வது கார்கில் விஜய் திவாஸ் வெற்றி தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, இன்று (ஜூலை.26) கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு வீரவணக்கம் செய்தார்.
அதேபோல் உத்தர பிரதேசம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மேலும், இந்திய ராணுவத்தின் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் என்.ராஜா சுப்ரமணி, கடற்படை துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கே.சுவாமிநாதன், இந்திய விமானப் படை துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஏ.பி. சிங், சிஐஎஸ்சி லெப்டினன்ட் ஜெனரல் ஜான்சன் பி மேத்யூ ஆகியோர் தேசிய போர் நினைவிடத்தில் கார்கில் போர் வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், போரில் உயிர் நீத்த வீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கார்கில் போரில் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மேஜர் சரவணன் உயிர் நீத்தார். சாதாரண வீரராக இந்திய ராணுவத்தின் இணைந்த சரவணனன் கார்கில் போரில் மிகக் குறுகிய காலத்தில் மேஜர் அந்தஸ்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்காதது ஏன்? கனிமொழி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்! - Parliament Monsoon Session