தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சந்தேஷ்காலி விவகாரம்; காந்தியின் குரங்குகளைப் போல இந்தியா கூட்டணி தலைவர்கள் மௌனம் - மோடி கடும் தாக்கு - Trinamool Congress

PM Modi: சந்தேஷ்காலி விவகாரத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும், இந்தியா கூட்டணி தலைவர்களும் மகாத்மா காந்தியின் குரங்குகளைப் போலக் கண், காது, வாய் மூடி மௌனமாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

PM Modi
சந்தேஷ்காலி விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச்சு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 9:26 AM IST

ஆரம்பாக்:மேற்கு வங்கம் ஹுப்ளி மாவட்டத்தின் ஆரம்பாகில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,200 கோடி மதிப்பிலான ரயில்வே, எரிவாயு, எண்ணெய் குழாய்கள், கழிநீர் சுத்திகரிப்பு, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளுக்கான நலத்திட்டப் பணிகளுக்கு நேற்று (மார்ச்.1) அடிக்கல் நாட்டினார்.

அப்போது மேடையில் பேசிய பிரதமர் மோடி, "சந்தேஷ்காலியில் உள்ள சகோதரிகளுக்கு என்ன நடந்து என்பதை இந்த நாடே பார்த்துக் கொண்டு இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் கொந்தளிப்பில் உள்ளது. சந்தேஷ்காலியில் என்ன நடந்தது என்று சமூக சீர்திருத்தவாதி ராஜராம் மோகன்ராய் அறிந்தால் அவரின் ஆத்மா கண்ணீர்விடும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி எல்லை மீறிவிட்டார். இங்குள்ள பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியதிற்காக மாநில பாஜக தலைவர்கள் போராடி உள்ளனர். பல நாள்கள் தலைமறைவாக இருந்த ஷேக் ஷாஜகான் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேஷ்காலி பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல், இந்தியா கூட்டணியில் (INDIA Alliance) உள்ள எல்லா உயர்மட்ட தலைவர்களும் மௌனமாக உள்ளனர். குறிப்பாக, இந்தியா கூட்டணி தலைவர்கள் இந்த விவகாரத்தில் மகாத்மா காந்தியின் குரங்குகளைப் போலக் கண், காது, வாய் மூடி இருக்கிறார்கள்' என்று குறிப்பிட்டார்.

மேலும் பேசிய பிரதமர் மோடி, 'இந்த விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார். அது மட்டுமல்லாது அதிகாரிகளுக்கு பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பாலியல் வன்கொடுமை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டை சந்தித்ததுவரும் ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா கூட்டணி, ஊழல் மற்றும் வாரிசு அரசியல் செய்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்துள்ளது. ஆனால், குற்றவாளிகளைப் பாதுகாக்க மம்தா பானர்ஜி போராட்டங்கள் நடத்துகிறார்.

திரிணாமூல் காங்கிரஸைப் பொறுத்தவரையில், நான்தான் அதன் முதல் எதிரி. கொள்ளையடிக்கும் எண்ணத்தில் ஆட்சி செய்பவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு காயத்திற்கும் தேர்தல் வாக்குப்பதிவில் பதில் தெரிவிக்கப்படும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

சந்தேஷ்காலி விவகாரம்:திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியான ஷேக் ஷாஜகான் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் நிலத்தை அபகரிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேஷ்காலி பகுதி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஷேக் ஷாஜகான், கடந்த 50 நாட்களுக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த பிப்.28ஆம் தேதி இரவு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.

இதையும் படிங்க:ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; திருச்சி பண்ணப்பட்டி ஒப்பந்ததாரருக்கு கிடைத்த நிலுவைத்தொகை!

ABOUT THE AUTHOR

...view details