டெல்லி:5 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் அணு ஆயுதங்களை சுமந்து சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அளிக்கும் அக்னி 5 ஏவுகணை சோதனையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான டிஆர்டிஓ வெற்றிகரமாக நிகழ்த்தியது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நீண்ட தூரம் மற்றும் குறைந்த தூரம் பயணிக்கும் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்னி, திரிசூல், ஆகாஷ், நாக், பிரித்வி உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில் அக்னி ஏவுகணை நீண்ட தூரம் பயணிப்பதோடு, அணு ஆயுதங்களையும் சுமந்து செல்லும் திறன் வாய்ந்ததாகும். தற்போது அக்னி 3 ஏவுகணை பயன்பாட்டில் உள்ள நிலையில், அதனை மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனையை கடந்த சில ஆண்டுகளாக டிஆர்டிஓ மேற்கொண்டு வந்தது.
சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணிக்கக் கூடிய அக்னி ஏவுகணை, அணு ஆயுதத்தை சுமந்து செல்லக்கூடிய திறன் படைத்ததாகும். அந்த வகையில் அக்னி 5 ஏவுகணை சோதனையை டிஅர்டிஓ அதிகாரிகள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிகரமாக சோதனையை மேற்கொண்ட டிஆர்டிஓ ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, "டிஆர்டிஓ விஞ்ஞானிகளின் மிஷன் திவ்யாஸ்த்ரா வெற்றிக்கு பெருமை அடைகிறேன். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி 5 ஏவுகணையின் முதல் வெற்றிகரமான சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பல இலக்குகளை ஒரே நேரத்தில் துல்லியமாக தாக்கி அளிக்கும் தொழில்நுட்பத்திற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க :"நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமல்" அரசிதழில் அறிவித்த மத்திய அரசு! அடுத்து என்ன நடவடிக்கை?