சென்னை: சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில், பெண்கள் யாரை தனது சகோதரர்களாக கருதுகிறார்களோ, அவர்களது மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது முக்கிய நிகழ்ச்சியாகும்.இதனை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஓர் ஆண், அந்த சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது.
ரக்ஷா பந்தன்: முதலில் வட இந்திய பகுதிகளில்தான் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆனால் தற்போது தென் இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் பௌர்ணமி நாளில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படும். உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதர சகோதரிகளிடையே பாச பிணைப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இன்று கொண்டாடப்பட்டு வரும் ரக்ஷா பந்தனுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து:ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “மங்களகரமான ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விழா, சகோதரன், சகோதரிகளுக்கு இடையிலான அன்பு, நம்பிக்கை அடிப்படையிலான இந்த விழா, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையும் ஏற்படுத்துகிறது. இந்த நன்னாளில் நமது சமுதாயத்தில் உள்ள பெண்களின் மரியாதையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய நாட்டு மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து: இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சகோதரன், சகோதரிகளுக்கிடையிலான அன்பின் அடையாளமாக உள்ள ரக்ஷா பந்தன் பண்டிகை தின வாழ்த்துக்கள். இந்த புனித பண்டிகை உங்களது உறவில் இனிமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.