புதுடெல்லி: நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமாதானம் செய்து அவர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற செய்யவோ அல்லது இடம் மாற்றவோ செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால், 17 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் நிலையில் அவரது உடல் நிலையின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறித்தும், அவரது உடல் நிலை சீரடைவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜால் புயான் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், "காந்திய தத்துவத்தின் வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியாக உரிமை உள்ளது. எந்தவிதத்திலும் பலபிரயோகம் கூடாது என்பதுதான் எங்களின் பரிந்துரை. வன்முறை வழியில் போராடக்கூடாது என்று விவசாயிகளையும் வலியுறுத்துகின்றோம்.
இதையும் படிங்க:இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சி...பாஜகவை சாடிய பிரியங்கா காந்தியின் கன்னிப்பேச்சு!
மத்திய அரசு, பஞ்சாப் அரசின் பிரதிநிதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவாலை சந்தித்து மருத்துவ உதவி அளிக்க வேண்டும். அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவரது உயிரை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதுதான் முதன்மையானது. நீதிமன்றத்தின் முதன்மையான பணி என்பது விவசாயிகளை சமாதானப்படுத்தி அவர்களை வேறு இடத்தில் போராடும் படி கூற வேண்டும். அல்லது அவர்களது போராட்டத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி முதல் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். பஞ்சாப் அரசு, மத்திய அரசு சார்பில் அவருக்கு 24 மணி நேர மருத்துவ உதவி அளிக்க வேண்டும். அவருடன் மற்றும் இதர விவசாயசங்கங்களின் தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்தக் கூடாது, அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்,"என்று உ்த்தரவிட்டனர்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.