இடாநகர்: 18வது மக்களவையுடன் சேர்த்து அருணாச்சல பிரதேச மாநில சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தது.
இதில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. போட்டியின்றி வெற்றி பெற்ற வேட்பாளர்களில் முதலமைச்சர் பெமா காண்டுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவிற்கு அடுத்ததாக தேசிய மக்கள் கட்சி 5 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
மேலும், அருணாச்சல் மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றது. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் முதலமைச்சராக பெமா காண்டு இன்று (ஜூன்.13) பதவியேற்றுக் கொண்டார். அவர் மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேச முதலாமைச்சராக பதவியேற்றார்.
இடாநகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பெமா காண்டுவுக்கு ஆளுநர் கே.டி. பர்நாயக் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் சேர்த்து 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா கிரண் ரிஜிஜூ அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா மற்றும் மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவ்து முறையாக அரியணை ஏறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பதவியேற்ற ஸ்ரீ பெமா காண்டு ஜிக்கு வாழ்த்துக்கள். அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் மக்களுக்குச் சேவை செய்ய அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த குழு மாநிலம் இன்னும் வேகமான வளர்ச்சியை உறுதி செய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:குவைத் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 19 பேர் பலி! ரூ.12 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! - Kuwait Building fire