புதுடெல்லி:ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்தும் வகையில் மக்களவையில் அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா 2024 மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அறிமுக நிலையிலேயே இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது.
நாடாளுமன்றத்தின் குளிர் காலக் கூட்டத்தொடர் இன்று காலை வழக்கம்போல் கூடியது. மக்களவையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அறிக்கைகள், துறை சார்ந்த அறிக்கைகளை அமைச்சர்கள் தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அரசியலமைப்பு (129வது திருத்தம்) மசோதா 2024ஐ மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் விவாதம் மேற்கொண்டுள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, "சட்டப்பேரவைகளின் பதவிகாலங்கள் குறித்து மசோதாவில் கூறப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு, இந்த மசோதா அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீது நடந்த தாக்குதலாகும். எனவே இந்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்," என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்த விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சியின் எம்பி தர்மேந்திர யாதவ்," உடனடியாக இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். நாட்டில் சர்வாதிகார ஆட்சியை பாஜக விரும்புகிறது," என்றார்.
திமுக எதிர்ப்பு:ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டமசோதா மீது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு,"தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதுபோல ஒரே நாடு ஒரே தேர்தல் முறை கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இம்மசோதாவை ஆதரிக்க முடியாது. பாஜக அரசிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்த மசோதாவை எப்படி சட்டமாக்க முடியும்?
தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆட்சி செய்வதற்காகவே வாக்காளர்கள் ஒரு அரசை தேர்தெடுக்கிறார்கள். அது வாக்காளர்களின் அடிப்படை உரிமை. ஒரே தேர்தல் முறை மூலமாக அவ்வுரிமையை இந்த மசோதா பறிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் தேர்தல் நடத்த ஒவ்வொரு முறையும் 13981 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும், மேலும் 9284 கோடி ரூபாய் கூடுதல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க மட்டுமே செலவு செய்ய வேண்டும். இது தேவையில்லாதது. நாடு முழுவதும் அனைத்து கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நடைமுறை சாத்தியமில்லை என 2015ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழுவின் 79வது அறிக்கை முடிவு செய்திருக்கிறது என்பதை இங்கே நினைவூட்டுகிறேன். மேலும் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இந்த மசோதாவை முதலில் விவாதித்துவிட்டு மீண்டும் அவையில் விவாதத்திற்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,"என்றார்.
இந்த விவாதத்தில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்பி கல்யாண் பானர்ஜி, "அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீது நடந்த தாக்குதலாகும். மாநில சட்டப்பேரவைகள் மத்திய அரசின் தயவில் இல்லை,"என்றார்.
ஆய்வுக்கு அனுப்ப ஆதரவு :இதனிடையே, மக்களவையில் விவாதத்தின் மீது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்," என்று பரிந்துரைத்தார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்புவது குறித்து மக்களவையில் டிவிஷன் அடிப்படையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்புவதற்கு ஆதரவாக 269 வாக்குகள் கிடைத்தன. கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பக் கூடாது என 198 பேர் வாக்களித்திருந்தனர். இதையடுத்து இந்த மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. அதன்படி அமைக்கப்பட உள்ள கூட்டுக்குழுவில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் அடிப்படையில் பிரதிநிதிகள் இடம்பெறுவர். மேலும், குழுவில் இடம்பெறும் பெயர்களை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பார் என்றும், இதன் தலைவராக ஆளும் பா.ஜ.க-வின் உறுப்பினரே தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.