புதுடெல்லி:மக்களவையில் அமளிக்கு இடையேயும் ரயில்வே (திருத்த) சட்டம் 2024 நிறைவேறியது. அதே போல பேரிடர் மேலாண்மை (திருத்த) சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் 12ஆவது நாளான இன்று மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தொடக்கத்திலும், இடையிலும் இடையூறால் பாதிக்கப்பட்டபோதும் மீதி நேரங்களில் மக்களவை நடவடிக்கைகள் நடைபெற்றன.
ரயில்வே (திருத்த) சட்டம் 2024 ஏற்கனவே மக்களவையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் ரயில்வே வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது இப்போதைய குளிர்காலக்கூட்டத்தொடரில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த சட்டத்திருத்தம் ரயில்வேயை தனியார் மயமாக்குவதை ஊக்குவிப்பதாக எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் கூறியிருந்தனர்.
இதையடுத்து இன்று மக்களவையில் ரயில்வே (திருத்த) சட்டம் 2024ஐ நிறைவேற்றி தருமாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தீர்மானத்தை முன் மொழிந்தார். அப்போது பேசிய அவர், "ரயில்வே திருத்தச் சட்ட மசோதா, ரயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சி என சில உறுப்பினர்கள் போலியான கட்டுக்கதைகளை உருவாக்கினர். அரசியல் அமைப்பு சட்டம் குறித்து ஏற்கனவே அவர்கள் கூறிய கட்டுக்கதை தோல்வியடைந்து விட்டது,"என்றார். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் ரயில்வே (திருத்த) சட்டம் 2024 நிறைவேற்றப்பட்டது.
பேரிடர் மேலாண்மை திருத்த சட்டம்:மக்களவையில் இன்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், பேரிடர் மேலாண்மை திருத்த சட்டம் 2024 ஐ அறிமுகம் செய்தார். இந்த திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து விவாத த்தில் பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர்,"இந்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது கூட அதிசயமாக உள்ளது. வயநாடு பகுதியில் பேரழிவு நேரிட்டதை நம்மால் தடுக்க முடியவில்லை. அந்த பேரழிவில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டம் திறமையின்மையை நிறுவனமயப்படுத்துகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் திறன்களை விரிவாக்கம் செய்ய வேண்டும்," என்றார்.
ரயில்வே திருத்த சட்டம் குறித்த விவாதத்தில் பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி,"இந்த திருத்தச் சட்டம் கூட்டாட்சி கட்டமைப்பை அழிக்கும் வகையில் உள்ளது. இந்த மசோதா மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. பரஸ்பர ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி பற்றி பேசவில்லை,"என்றார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி கல்யாண் பானர்ஜி பேசும்போது மத்திய இணையமைச்சர் நித்தியானந்த ராய் குறுக்கிட்டு பதில் அளித்தார். ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியாவும் பதில் அளித்தார். அப்போது குறுக்கிட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி கல்யாண் பானர்ஜி கூறிய வார்த்தைகள் சர்ச்சையை எழுப்பின. அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கினார்."அவையில் யாருடைய மனமும் புண்படும்படி பேசவில்லை,"என்று திரிணாமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறியபோதும் அதனை அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா ஏற்கவில்லை. தொடர்ந்து ஆளும் கட்சி எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் அவை மறுநாள் 11 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.