தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல்! - ONE NATION ONE ELECTION

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்படுகிறது.

தேர்தலில் வாக்கு செலுத்திய பின் விரலில் வைத்த மையை காட்டும் வாக்காளர்கள்
தேர்தலில் வாக்கு செலுத்திய பின் விரலில் வைத்த மையை காட்டும் வாக்காளர்கள் (ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

Updated : 5 hours ago

டெல்லி: மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வழிவகை செய்யும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதா இன்றைய (டிசம்பர் 17) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதனை தாக்கல் செய்யும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், மத்திய பிரதேச சட்டம், 1963; தேசிய தலைநகர் டெல்லி சட்டம், 1991; மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019 ஆகியவற்றை திருத்துவதற்கான மசோதாவையும் அறிமுகம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் (ETV Bharat)

உயர்மட்ட குழுவின் பரிந்துரை

முன்னதாக, ஒன்றிய அமைச்சரவை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதற்கான உயர் மட்டக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இருந்தார். இந்த குழு ஒரே நேரத்தில் தேர்தல்களை இரண்டு கட்டமாக நடத்த பரிந்துரைத்தது.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் (PIB)

முதற்கட்டமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தவும், அதன்பிறகு 100 நாட்களுக்குள் உள்ளூர் அமைப்புகள் (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) தேர்தல்களை நடத்தவும் பரிந்துரைத்தது. இதனை ஏற்றுக்கொண்ட ஒன்றிய அமைச்சகம், சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது.

கூட்டுக்குழு விசாரணைக்கு போகுமா?

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல் அளித்து நாள்கள் கடந்ததால், எப்போது வேண்டுமானாலும், இந்த அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் டிசம்பர் 20-ஆம் தேதியுடன் முடிவடையும் என்பதால், நேற்றைய தினம் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவியது.

ஆனால், அலுவல் பட்டியலில் அதுகுறித்த எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், இன்று பகல் 12 மணிக்கு இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டத்திருத்ததிற்கு மக்களவையில் எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில், அதனைக் கூட்டுக்குழு விசாரணைக்கு சபாநாயகர் ஓம்பிர்லா அனுப்பி வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கழுகு பார்வையில் நாடாளுமன்ற கட்டடம் (ANI)

அந்த கூட்டுக்குழுவில் நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் உறுப்பினர்கள் அடிப்படையில் பிரதிநிதிகள் இடம்பெறுவர். மேலும், குழுவில் இடம்பெறும் பெயர்களை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பார் என்றும், இதன் தலைவராக ஆளும் பா.ஜ.க-வின் உறுப்பினரே தேர்வு செய்யப்படுவார் எனவும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

ஒரே நாடு, ஒரே தேர்தல்

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையை சட்டமாக்க அரசியல் சாசனத்தில் '82ஏ' என்ற புதிய பிரிவு இணைக்கப்பட உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படும். எனினும், சில மாநிலங்கள் அல்லது ஒரு மாநிலத்திற்கு மட்டும் அதே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாமல் போகலாம்.

இதையும் படிங்க
  1. ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை அழித்துவிடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!
  2. மீனவர்கள் பிரச்னைகளுக்கு மனிதாபிமான ரீதியில் தீர்வு: பிரதமர் மோடி - இலங்கை அதிபர் திசநாயகே முடிவு!
  3. அப்பாவி ஆண்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்படும் டவுரி சட்டம்..? 'நேரம் வந்தாச்சு'.. சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான மனு!

இந்த சூழலை கையாள்வதற்கான சரத்துகளும் சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, மசோதாவின் பிரிவு 2, உட்பிரிவு 5-இல், "மக்களவை தேர்தலுடன், ஏதேனும் ஒரு மாநில தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதாக தேர்தல் ஆணையம் கருதினால், பின்னொரு நாளில் தேர்தலை நடத்தும் வகையில் ஆணை பிறப்பிக்க குடியரசு தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்யும்," என்று கூறப்பட்டிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு:

ஒரே நேரத்தில் நாடு முழுவதிலும் தேர்தல் நடத்தும் வகையில் கொண்டுவரப்படும் சட்டத்திருத்த மசோதாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்பட இண்டி கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாட்டை சர்வாதிகார போக்கிற்கு இது எடுத்துச் செல்லும் என்று குறிப்பிட்டு, மாநில அரசியலை ஒடுக்கும் மற்றும் அதை மாற்றியமைக்க அச்சுறுத்தும் இந்த சட்ட மசோதாவை ஜனநாயக சக்திகள் ஒன்று பட்டு எதிர்போம் என எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பிய நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து, மத்திய அமைச்சரவையானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமான மற்றும் கூட்டாட்சிக்கு எதிரான ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றப் பார்க்கிறது. இது கவனமாக பரிசீலிக்கப்பட்ட சீர்திருத்தம் அல்ல; இது இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சர்வாதிகார சட்டத்திருத்தமாகும் என தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகளைப் பார்க்கும்போது, இன்று முன்மொழியப்படும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' சட்டத்திருத்த மசோதாவுக்கான விவாதத்தில், எதிர்க்கட்சிகள் தங்களின் எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : 5 hours ago

ABOUT THE AUTHOR

...view details