புவனேஸ்வர்:ஒடிசா கடற்பரப்பு அதன் அழகிய கடற்கரைகளுக்கு புகழ்பெற்றது. இது அடிக்கடி பேரழிவின் தாக்கத்துக்கும் உள்ளாகிறது. வங்க கடலுக்கு மிக அருகாமையில் ஒடிசா இருப்பதுதான் அதற்கு காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஒடிசாவில் 1890களில் இருந்து இதுவரை 400க்கும் மேற்பட்ட புயல் கரையைக் கடந்துள்ளது. இது போல் தொடர்ச்சியாக ஒடிசா புயலின் தாக்கத்துக்கு உள்ளாகிறது. குறிப்பாக பைலின், ஹுதுத், ஃபானி போன்ற புயல்கள் ஒடிசாவில் கரையை கடந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதையெல்லாம் விட 1999 சூப்பர் சூறாவளியின் போது ஒடிசாவில் 10000 பேர் உயிரிழந்தனர். இப்படி அடிக்கடி புயலால் தாக்கப்படுவதற்கு சிக்கலான வளிமண்டல மற்றும் புவியியல் காரணிகள் மூலகாரணமாக திகழ்கின்றன.
இது குறித்து பேசிய புவனேஸ்வர் ஐஐடி நிபுணர், உதவி பேராசிரியர் சந்தீப் பட்நாயக்,"இந்தியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து வரும் வறண்ட வெப்பமான காற்றின் கலவை மற்றும் வங்க கடலில் இருந்து வரும் ஈரப்பதமான காற்று ஆகியவற்றின் கலவையால் காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகின்றன. இவைதான் ஒடிசா கடற்கரை பகுதி புயலால் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு காரணமாகும். ஒடிசா ஆறுகள், சிலிகா ஏரி ஆகியவற்றில் நிலவும் வெப்பம் நிலை புயல்கள் தீவிரம் ஆவதற்கும் கரையை கடப்பதற்கும் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றன,"என்றார்.
பிரதிநித்துவ படம் (Image credits-PTI) இது குறித்து விளக்கம் அளித்த உதவி பேராசிரியர் தேவதத்தா ஸ்வைன், "பெரிய புயலாக இருந்தால் அது, வங்கதேசத்தை நோக்கி திசை மாறி செல்லும், சிறிய புயலாக இருந்தால் அது ஒடிசாவை தாக்குகிறது. வளிமண்டல சூழல் சாதகமாகவும், வங்க கடலுக்கு அருகாமையில் இருப்பதுமே அதற்கு காரணமாகும். வங்கக்கடல் தனித்தன்மைவாய்ந்த நிலையில் இருப்பது மற்றும் பசிபிக் சூறாவளியின் பகுதியளவு தாக்கம் அரபிக்கடலை விட கொந்தளிப்பாக உள்ளது.
இதையும் படிங்க :கரையைக் கடந்த டானா புயல்.. 1,600 கர்ப்பிணிகள் பிரசவித்துள்ளதாக முதல்வர் தகவல்!
புயல்களை பருவமழை காலத்துக்கு முன்பு, பின்பு என வகைப்படுத்தலாம். பருவமழை காலத்துக்கு பிந்தைய புயல்கள் அடிக்கடி கரையை கடக்கும். அரேபிய பாலவனத்தின் வெப்பமான வறண்ட காற்று, அரபி கடலில் புயல்களை வலுவிழக்க செய்கிறது. இங்கே வங்க கடல், வலுவான புயல்களுக்கு உகந்த சூழலை கொடுக்கிறது. அடிக்கடி நேரிடும் இயற்கை பேரிடருக்கு இடையே ஒடிசா பேரிடர் மேலாண்மையில் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இது போன்ற சவால்களை சமாளிக்கும் திறனை பெற்றுள்ளது,"என்றார்.
ஒடிசாவில் இதுவரை தாக்கிய புயல்கள்
சூப்பர் புயல்(1999) :1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒடிசா முதன் முதலாக ஒரு கடுமையான வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டது. இதனால் கடலோரத்தில் இருந்த 7 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு அக்டோபர் 17-18க்கு இடைப்பட்ட காலத்தில் அதிதீவிர புயல் ஒடிசாவின் கடலோர பகுதிகளை தாக்கியது. குறிப்பாக கஞ்சம் மாவட்டத்தில் பெரும் அளவு உயிர் சேதங்களையும், சொத்து உடைமைகளுக்கு சேத த்தையும் ஏற்படுத்தியது.
ஒடிசாவின் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் மீட்பு பணிகள் (Image credits-Collector & District Magistrate Mayurbhanj@X) சூப்பர் சூறாவளி புயல்:ஒடிசாவில் சூப்பர் புயல் தாக்கிய பத்து நாட்களுக்குள் சூப்பர் சூறாவளி புயல் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி கடலோர மாவட்டங்களை தாக்கியது. குறிப்பாக ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, கட்டாக், குர்தா மற்றும் பூரி மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
சூப்பர் சூறாவளி புயல் தாக்கியபோது மணிக்கு 270 முதல் 300 கிமீ வேகத்தில் கடுமையான சூறாவளி காற்று வீசியது. பாரதீப் அருகே இது கரையைக் கடந்தது. இதன் தாக்கத்தால் அக்டோபர் 29 முதல் நவம்பர் 1ஆம் தேதி வரை 447 மிமீ முதல் 955 மிமீ வரை மழை பெய்தது. இதனால், பைதராணி, புத்தபலங்கா மற்றும் சலந்தி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஜாஜ்பூர், பத்ரக், கியோஞ்சர், பாலசோர் மற்றும் மயூர்பஞ்ச் மாவட்டங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல் காரணமாக கடலில் 5 முதல் 7 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பின. தலைநகர் புவனேஸ்வர் உட்பட பல மாவட்டங்கள் தகவல் தொடர்பு , மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவித்தன. 48 மணி நேரம் கடந்த பிறகே மீட்பு பணிகளை தொடங்க முடிந்தது.
பைலின் புயல் கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி ஒடிசா கடல்பகுதியை கடந்தது. இது மிகவும் தீவிர சூறாவளி புயலாக இருந்தது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. கோபால்பூர் அருகே கரையை கடந்தது. அடர்த்தியான புயல் என்ற போதிலும், முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் 1999ஆம் ஆண்டின் சூப்பர் புயலை போல இல்லாமல் பாதிப்புகள் குறைக்கப்பட்டன.
ஹுதுத் புயல் 2014ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தாக்கியது. இது ஆந்திர பிரதேச மாநிலத்தில் கரையைக் கடந்தபோதிலும், ஒடிசாவில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 4 லட்சம் மக்கள் மேடான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த புயல் விசாகப்பட்டினத்தில் இந்த புயல் கரையைக் கடந்தது.
திட்லி புயல் கடந்த 2018ஆம் ஆண்டு மிகவும் தீவிர சூறாவளி புயலாக வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா அருகே கரையை கடந்தது. 60 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டனர். 77 பேர் உயிரிழந்தனர். கோபால்பூர், களிங்கப்பட்டினம் பகுதியில் மிகவும் கடுமையான வேகத்தில் புயல்காற்று வீசியது.
புயல் தாக்கிய முறை :பருவமழை காலத்துக்கு பிந்தைய காலகட்டத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில்தான் ஒடிசாவில் முக்கியமான புயல்கள் தாக்கியது. காற்றழுத்த தாழ்வு நிலையால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒடிசா கடலோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டன. தீவிர புயல்கள் ஒடிசாவில் பெரும்பாலும் ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்