புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் ஜஜ்பூர் மாவட்டத்தில் கோபிநாத் ஜுயு நோடல் அப்பர் பிரைமரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற இருந்த நிலையில், தேர்வு வினாத் தாள்கள் இணையத்தில் கசிந்து உள்ளது. இது குறித்து ஒடிசா பள்ளிக் கல்வித் துறையினர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், 'Samir Educational' என்ற யூடியூப் சேனலில் வினாத் தாள்கள் கசிய விடப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக கஞ்சம் ரம்பா பகுதியைச் சேர்ந்த சமீர் சாகு என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து உள்ளனர். இதில் 'Pro Answer' என்ற மற்றொரு யூடியூப் சேனலிலும், வினாத் தாள்கள் கசிய விடப்பட்டு உள்ளதாக சமீர் சாகு விசாரணையில் தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் ஜகன்னாத் கர் என்பவரை கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்ட 49 வயதான ஜகன்னாத் கர், கோபிநாத் ஜுயு நோடல் அப்பர் பிரைமரி பள்ளியில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்து உள்ளார்.
தனது மனைவியின் பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் ஜகன்னாத் கர், அதில் அதிக சந்தாதாரர்களை திரட்டவும், வருவாயை பெருக்கவும் திட்டமிட்டு உள்ளார். இந்நிலையில், தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன்பு, பள்ளியில் உள்ள 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு வினாத் தாள்கள் ஜகன்னாத் கர்க்கு கிடைத்து உள்ளது.
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜகன்னாத் கர், தனது மனைவியின் யூடியூப் சேனலில் வினாத் தாள்களை பதிவேற்றம் செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஜகன்னாத் கர் வீட்டியில் சோதனையிட்டதில் லேப்டாப் மற்றும் அதில் வினாத் தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜகன்னாத் கர் மற்றும் அவரது மனைவி ருதுபூர்ணா பதி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். யூடியூபில் சந்தாதாரர்களை திரட்டவும், வருவாயை பெருக்கும் எண்ணத்தில் வீண் வினையில் ஆசிரியர் சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :ரயில்வே கிராசிங்கை உடைத்து ரயில் மீது கார் மோதல்! சினிமாவை மிஞ்சிய கோரம்! என்ன நடந்தது? - Car Crash Railway Crossing