புதுடெல்லி:அனைத்து தனியார் சொத்துகளையும் சமூகத்தினுடைய பொருள் வளங்களின் ஒரு பகுதியாக கருதி, அரசு அதனை கையகப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
7:2 ஆதரவு:ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த இத்தீர்ப்பில், அனைத்து தனியார் சொத்துகளும் சமூகத்தின் பொருள் வளங்களின் ஒரு பகுதியாக இருக்க முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 39 (b) பிரிவின்படி, ஓர் அரசு இதனை சமமாக மறுபகிர்வு செய்ய கடமைப்பட்டுள்ளது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட ஏழு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், முந்தைய சோசலிச அடிப்படையிலான பொது நலனுக்காக அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கைப்பற்ற முடியாது என்று நீதிபதிகள் கூறினர். அதேசமயம், பெருன்பான்மை நீதிபதிகளின் இக்கருத்துக்கு நீதிபதிகள் நாகரத்னா மற்றும் துலியா எதிர்த்து தெரிவித்தனர்.
தனியாருக்குச் சொந்தமான அனைத்து வளங்களையும் அரசு கையகப்படுத்தலாம் என்ற நீதிபதி கிருஷ்ண ஐயரின் முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெரும்பான்மை நீதிபதிகள் நிராகரித்தனர். பழைய தீர்ப்பு ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் தூண்டப்பட்டது என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.