சாம்ராஜ்நகர் : கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அடுத்த ஹெக்கவாதி கிராமத்தில் செய்தியாளர்களிடையே பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தமிழகத்திற்கு ரகசியமாக காவிரியில் இருந்து தண்ணிர் திறந்து விட முடியாமா என்று கேள்வி எழுப்பினார். மேலும் காவிரியில் போதிய தண்ணீர் இல்லாத போது பாஜக உள்ளிட்டோர் பொய் பிரசாரம் செய்து வருவதாக கூறினார்.
கர்நாடாகவில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்றும், தண்ணீர் திறந்து விடக் கோரி தமிழக அரசும் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை என்றும் சித்தராமையா தெரிவித்தார். தமிழக அரசு கேட்டாலும், மத்திய அரசு உத்தரவிட்டலும், தமிழகத்துக்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தண்ணீர் கொடுங்கள் என்று யார் சொன்னாலும் நாங்கள் தண்ணீர் கொடுப்பதில்லை என்றும் சித்தராமையா கூறினார்.
முன்னதாக, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமார், தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர் திறக்க முடியாது என்றும் தண்ணீர் திறந்து விட நாங்கள் முட்டாள் இல்லை என்றும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கான எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.