ராஞ்சி:ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது எழுந்த நிலக்கரி சுரங்க முறைகேடு,பணமோசடி குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல், சம்மனுக்கு பதிலளிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் 8வது முறையாகச் சம்மன் அளித்துக் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஹேமந்த் சோரன் வீட்டில் அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் ஜனவரி 29 முதல் 31ஆம் தேதிக்குள் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும், இல்லை என்றால் விசாரிக்க நாங்கள் வருவோம் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த முறையும் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல், சம்மனுக்கு பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். மேலும், ஹேமந்த் சோரன் திடீர் பயணமாக டெல்லி சென்றிருப்பதாகக் கூறப்பட்டது. இதனை அறிந்த அமலாக்கத்துறையினர் நேற்று காலை 9 மணி அளவில் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் வீட்டிற்கு சென்றனர்.
அப்போது ஹேமந்த் சோரன் வீட்டில் இல்லை எனவும், அங்குள்ள நபர்கள் யாருக்கும் அவர் எங்கு சென்றுள்ளார் எனத் தெரியாது எனத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அமலாகத்துறையினர் இரவு வரை அங்கு காத்திருந்துள்ளனர். ஆனால் ஹேமந்த் சோரன் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இரவு 10.30 மணி அளவில் அமலாக்கத்துறையினர் அங்கிருந்து வெளியேறுகையில் ஹரியானாவில் பதிவு செய்யப்பட்ட ஒரு பிஎம்டபிள்யூ காரையும், வீட்டில் இருந்து சில ஆவணங்களையும் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை (ஜனவரி 31) ராஞ்சியில் உள்ள இல்லத்தில் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு இணங்கி வாக்குமூலம் அளிக்க உள்ளதாக ஹேமந்த் சோரன் தரப்பில் இருந்து அடையாளம் காணப்படாத ஒருவர் அமலாக்கத்துறைக்குத் தகவல் அளித்ததாகக் கூறப்படுகிறது.