தமிழ்நாடு

tamil nadu

கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 125 ஆக உயர்வு.. 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் - மாநில அரசு அறிவிப்பு! - KERALA LANDSLIDE

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 5:41 PM IST

Updated : Jul 30, 2024, 9:58 PM IST

Kerala Kozhikode Landslide: கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 125 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், தற்போது தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 854 பேர் மீட்கப்பட்டு 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேரள நிலச்சரிவு மீட்புப் பணிகள்
கேரள நிலச்சரிவு மீட்புப் பணிகள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

வயநாடு: கேரளா மற்றும் தமிழக எல்லைகளில் கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வந்தது. இதில், கேரளா மாநிலம் வடக்கு கோழிக்கோடு பகுதியில் உள்ள விலாங்காடு மற்றும் மலையங்காடு பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மேலும், அப்பகுதியில் இருந்த பல்வேறு வீடுகள், பாலம் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளது.

தொடர்ந்து, வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மேப்பாடு முண்டக்கை மற்றும் சூரல்மலை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட இதுவரையில் 80 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மீட்புப்பணிகள்:இதனையடுத்து, நேற்றிரவு முதல் அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது தேசிய பாதுகாப்பு மீட்புப் படை (NDRF) வீரர்கள், மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, கோவை மாவட்டம் சூலூரில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காகச் சென்றுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் இருந்தும் ராணுவத்தினர் வயநாடு பகுதிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில், மருதோங்கரை கிராமம் மற்றும் மலையங்காடு பகுதியில் உள்ள பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதியில் உள்ள 15 க்கும் பேற்பட்ட குடும்பங்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்ந்து, ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களுக்கு மாற்றப்படும் பணியில் NDRF குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கக்கயம் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அணையின் ஷட்டர்கள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், குட்டியாடி ஆறு, சாலியாறு, செருப்புழாய், மகிப்புழா உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர் மழை மற்றும் நிலச்சரிவு பாதிப்பின் காரணமாக சுற்றுலாத் தலங்கள், குவாரிகள் மற்றும் சுரங்க வேலைகள் நிறுத்த உத்தரவிடப்பட்டது. தற்போது வரையில், மாவட்டத்தில் உள்ள 196 குடும்பங்களைச் சேர்ந்த 854 பேர் 41 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெள்ளத்தில் சிக்கி பாதிப்படைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிலச்சரிவில் இதுவரையில் 125 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்றும், நாளையும் கேரளாவில் துக்கம் அனுசரிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளனது. இந்நிலையில், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கலந்துரையாடி நிலைமை குறித்து கேட்டறிந்துள்ளார்.

மேலும், பேரழிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதியளித்துள்ளார். இதற்கிடையில், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி ஜெபி மாதர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், “பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ரூ.5 ஆயிரம் கோடி சிறப்பு நிவாரணத் தொகுப்பை வெளியிட வேண்டும். பேரழிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். வயநாட்டின் தற்போதைய நிலையை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை நியமிக்க வேண்டும்” என்று மாதர் கோரிக்கை வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு; 1000 பேரின் நிலை என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்! - KERALA LANDSLIDE

Last Updated : Jul 30, 2024, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details