பஞ்சகுலா:ஹரியானா முதலமைச்சராக நயாப் சிங் சைனி இன்று இரண்டாவது முறையாக பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
ஹரியானா மாநிலத்தில் அக்.5 ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.
காங்கிரஸ் 37 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், ஹரியானாவில் முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனி (54) பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவை சந்தித்து மாநிலத்தில் அடுத்த ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையும் படிங்க:மகாராஷ்டிரா தேர்தல்: சூடுபிடிக்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை; மூன்று இலக்கத்தில் சீட் கேட்கும் காங்கிரஸ்!
இந்நிலையில், ஹரியானாவின் முதல்வராக நயாப் சிங் சைனி இன்று பதவியேற்கவுள்ளார். பஞ்சகுலாவின் ஷாலிமார் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்காக பெரிய மேடை தயார் செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், எதிர்க்கட்சியினர் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொள்கின்றனர்.
மேலும், மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் சுமார் 50,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக பலத்த பாதுகாப்புகளும் போடப்பட்டு, பதவியேற்பு நிகழ்வினை காண 14 பெரிய எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பொதுமக்கள் வந்துசெல்ல போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்