மும்பை:288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிராவில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த அக்டோபர் 15ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து, அக்டோபர் 22 முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்றது.
இதனையடுத்து, நவம்பர் 4 வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். இதுவரை 7 ஆயிரத்து 995 வேட்பாளர்களிடம் இருந்து 10 ஆயிரத்து 905 வேட்புமனுக்கள் பெறப்பட்டு உள்ளதாக அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ் சேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ் சேனா (UBT), சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (SCP) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஷ் அகாடி களத்தில் உள்ளனர். இதனால் இருமுனை போட்டியே நிலவுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா நகர்ப்புறத்தில் உள்ள மான்குர்ட் சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதியில் மகாயுதி கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான சிவ் சேனா தரப்பில் சுரேஷ் கிருஷ்ணா படில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதன்படி, அவர் தனது வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், நவாப் மாலிக் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சார்பில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்து உள்ளார்.