இடுக்கி / கேரளா:கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு மலைப் பகுதிக்குட்பட்ட இடத்தில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. மட்டுப்பெட்டி எனும் இடத்தின் எகோ பாயிண்ட் சாலை வளைவில் நிகழ்ந்த இந்த துயர சம்பவத்தில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் ‘ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி’யைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு மூணாறு காவல்துறையினர் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், கல்லூரியில் இருந்து சுற்றுலா வந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எகோ பாயின்ட் சாலை வளைவில், முன்னே சென்ற வாகனத்தை முந்திசெல்ல முயன்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலை அருகே கவிழ்ந்ததாக பேருந்தில் இருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குண்டலா அணையை பார்க்க போகும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. மொத்தம் 40 பேருடன் சென்ற பேருந்தில் இருந்த 15 பேர் காயங்களுடன் மூணாறு டாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு மாணவி உள்பட ஆசிரியை உயிரிழந்ததாக மூணாறு காவல்துறை உறுதி செய்துள்ளது. அவர்கள் வேணிகா என்ற ஆசிரியரும், ஆதிகா என்ற கல்லூரி மாணவியும் என்பது தெரியவந்துள்ளது. விபத்துக்கு அதிவேகமே காரணம் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த 15 பேர் மூணார் பகுதியில் உள்ள டாடா பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த ஏமி கார்மைக்கேல்! நாடகத்தால் கண்முன் கொண்டு வந்த மாணவிகள்! |
அவர்களில் படுகாயமடைந்த 4 பேரை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், கோலஞ்சேரி, கோட்டயம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது கிடைத்த தகவலின்படி, சுதன் (19) என்ற மாணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக டாடா பொது மருத்துவமனை உறுதி செய்துள்ளது.