ஆலப்புழா:கேரளாவில் நேற்று (டிச.2) திங்கட்கிழமை இரவு கேரளா அரசு பேருந்து மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வந்தனம் டிடி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கு மாணவர்கள் 11 பேர் காரில் சென்றுள்ளனர். அப்போது முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது, கார் எதிரே வந்த கேரளா அரசு விரைவுப் பேருந்து (KSRTC) மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அந்த விபத்தில் கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியுள்ளது. இந்த விபத்து இரவு 9.45 மணிக்கு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கிய மருத்துவ மாணவர்கள்
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டுள்ளனர். மேலும், தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில், 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், ஆலப்புழாவைச் சேர்ந்த ஷமில்கான் என்பவருக்குச் சொந்தமான காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் 11 பேரும் படம் பார்க்கச் சென்றதாகவும், ஆலப்புலாவிற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேர்ந்ததாகவும் சக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும், கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதாகச் சம்பவ இடத்தில் இருந்த நபர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், மழை காரணமாகவும், காரில் அதிக நபர்கள் பயணம் செய்ததாலும் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விபத்துக்கான காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலர் (RTO) தெரிவிக்கின்றனர்.