சென்னை: சென்னை ஐஐடியில் விநியோக கட்டமைப்பு மேலாண்மை சான்றிதழ் படிப்பிற்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம்-சிஐஐ போக்குவரத்து மையம் ஆகியவை இணைந்து விநியோகக் கட்டமைப்பு மேலாண்மை வல்லுநர் (Supply Chain Management professional – SCMPro) சான்றிதழ் படிப்புத் திட்டம் மீண்டும் தொடங்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம், மின்வணிகம், சில்லறை விற்பனை, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் வல்லுநர்களும், பொறியியல், வணிகம், அறிவியல், வணிக மேலாண்மைக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் இதற்கான பாடத்தி்ட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடத்திட்டம் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
விநியோக கட்டமைப்பு மேலாண்மை சான்றிதழ் படிப்பில் சேர மார்ச் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் https://code.iitm.ac.in/supply-chain-management-professional-certification-scm-pro என்ற இணையதள இணைப்பில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இது குறித்து பேசிய, சென்னை அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆண்ட்ரூ தங்கராஜ், "இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில்துறை நுண்ணறிவையும், சென்னை ஐஐடி சிறந்த கல்வியையும் இணைப்பதன் மூலமாக, விநியோக கட்டமைப்பு மேலாண்மை சான்றிதழ் படிப்பில் புதுப்பிக்கப்பட்ட பாடங்கள் கற்பிக்கப்படும். விநியோக கட்டமைப்புத்துறையில் வெற்றிபெறுவதற்கான வழிகளை இந்த படிப்பில் சேருபவர்களுக்கு வழங்கும் வகையில் பாடத்திட்டம் இருக்கும்," என்றார்.
இதையும் படிங்க: புற்றுநோய் விழிப்புணர்வில் 'வண்ணமயமான ரிப்பன்கள்'..ஒவ்வொன்றும் குறிப்பது என்ன?
இந்த பாடத்திட்டத்தின் முக்கியத்துவத்தும் குறித்து பேசிய சிஐஐ போக்குவரத்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான மஹிதர், "சென்னை ஐஐடி - சிஐஐ உடன் இணைந்திருப்பதன் மூலம், இந்த ஒத்துழைப்புத் திட்டத்தை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்கு எடுத்துச் செல்லும்,"என நம்புகிறோம் என்றார்.
புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, சென்னை ஐஐடி பேராசிரியர்களால் 30 மணி நேர 5 வீடியோ தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. மின்-படிப்புக்கான உள்ளடக்கம், மாணவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கான நடுநிலையான விவாத மன்றங்களை அணுகல், ஞாயிற்றுக்கிழமைகளில் ஆன்லைனில் தேர்வு எழுதும் வசதி ஆகிய மேம்படுத்தப்பட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படிப்பில் பங்கேற்பவர்கள் 3 மணி நேர (180 நிமிடங்கள்) கால அளவுக்குள் 200 விருப்பத் தேர்வு கேள்விகளைக் (Multiple Choice Questions - MCQs) கொண்ட ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 70 சதவீதம் (200க்கு 140) மதிப்பெண் பெற வேண்டும். இந்த படிப்பின் நிறைவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிஐஐ, சென்னை ஐஐடி ஆகியவை இணைந்து கூட்டுச் சான்றிதழை வழங்கும்.