டெல்லி: கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி, தற்போது டெல்லி துணை நிலை ஆளுநராக இருக்கும் விகே சக்சேனா குறித்து மேதா பட்கர் கருத்து வெளியிட்டார். அதில் அப்போது குஜராத் அரசின் முக்கிய பொறுப்பில் இருந்த விகே சக்சேனா வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு மாநில மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்ததாக தெரிவித்து இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விகே சக்சேனா கடந்த 2001ஆம் ஆண்டு மேதா பட்கர் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக அகமதாபாத் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை குஜராத்தில் இருந்து டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் மாற்றி கடந்த 2003ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2011ஆம் ஆண்டு தான் நிரபராதி என்றும் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும் மேதா பட்கர் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இருப்பினும் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே மாதம் 24ஆம் தேதி சாகேத் நீதிமன்றம் சமூக ஆர்வலர் மேதா பட்கரை குற்றவாளி என அறிவித்தது.