கண்ணூர் (கேரளா):கண்ணூர் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பலத்த காயமடைந்த மாவோயிஸ்ட், மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்டுள்ள நிலையில், போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்ணூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில், மாவோயிஸ்ட் மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பு மண்டலக் குழு உறுப்பினர் சுரேஷ் (48) என்பவருக்கு இடது கால் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்ட் குழுவைச் சேர்ந்த அனைவரும் காட்டு யானைத் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கடந்த நிலையில், நேற்று (பிப்.17) மாலை 6.30 மணியளவில் சுரேஷை ஆயுதம் ஏந்திய 5 மாவோயிஸ்டுகள், பையாவூர் சித்தாரி காலனிக்கு அழைத்து வந்துள்ளனர். கால் மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை கம்பளி போர்த்தியவாறு மின்கம்பம் அருகே அமர வைத்த அவர்கள், சுரேஷின் குடும்பத்தாரைச் சந்தித்து அவரின் நிலை குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, தங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் உணவுப் பொருட்களை அங்கிருந்த வீடுகளில் இருந்து பெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பியுள்ளனர். இதையடுத்து, குடும்பத்தினர் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த பையாவூர் பஞ்சாயத்து தலைவர் சாஜூ சேவியர் மற்றும் அப்பகுதியினர், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலைப் பெற்ற பையாவூர் போலீசார், சுரேஷை அங்கிருந்து அழைத்து வர ஆம்புலன்ஸை அனுப்பியுள்ளனர். அதைத் தொடர்ந்து, அவரை போலீசார் அனுப்பிய ஆம்புலன்சில் ஏற்றி நான்கு கிலோ மீட்டர் தூரம் அழைத்து வந்த நிலையில், நான்கு கிலோ மீட்டர் தொலைவில் காத்திருந்த போலீசாரிடம் சுரேஷ் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.