இம்பால்:250க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க காரணமான இனமோதல் நேரிட்டதற்காக மன்னிப்பு அளிக்கும்படி மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் 53 சதவீத பெரும்பான்மை பிரிவினரான மெய்தி சமூக மக்கள் பள்ளத்தாக்கு பகுதிகளில் வசித்து வருகின்றனர். குக்கி மற்றும் நாகாக்கள் உட்பட்ட பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 40 சதவீத மக்கள் மலை மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். மணிப்பூரின் பெரும்பான்மை இனமான மெய்தி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என 10 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். மெய்தி சமூக மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான பாஜக அறிவித்திருந்தது. பாஜகவின் இந்த அறிவிப்புக்குப் பிற பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி பழங்குடியினர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மெய்தி சமூக மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக ஒரு ஊர்வலத்தை நடத்தினர். அப்போது நடந்த மோதல் கலவரமாக வெடித்தது. மாதக்கணக்கில் தொடர்ந்த கலவரம் காரணமாக இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரன் சிங்,"கடந்த மூன்று, நான்கு மாதங்களாக இன மோதல்கள் குறைந்து உள்ளது. வரும் புத்தாண்டில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கையை இது அளிக்கிறது. இந்த மாநிலத்தில் என்ன நடந்ததோ அதற்காக நான் வருத்தம் தெரிவிக்க விரும்புகின்றேன். பெரும்பாலான மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்திருக்கின்றனர். பெரும்பாலானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கின்றனர். நான் வருந்துகிறேன் மற்றும் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.