தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளா முதல் குவஹாத்தி வரை... இந்தியாவில் இதுவரை நிகழ்ந்த மோசமான நிலச்சரிவுகள்! - Major Landslides in india - MAJOR LANDSLIDES IN INDIA

கேரளாவின் வயநாட்டில் கனமழையின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவு இதுவரை 100க்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்டுள்ளது. ஒட்டுமொத்த தேசத்தையே இத்துயர சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ள நிலச்சரிவுகள் குறித்த ஓர் மீள்பார்வை.

சிம்லா நிலச்சரிவு - கோப்புப்படம்
சிம்லா நிலச்சரிவு - கோப்புப்படம் (Image Credit - Getty Images)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 5:29 PM IST

ஹைதராபாத்: கடவுளின் தேசமான கேரளம் இன்று கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வயநாடு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவு இதுவரை 100-க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிரை குடித்துள்ளது. அட்டமலை, சூரல் மலை உள்ளிட்ட கிராமங்களில் 200 வீடுகள் நிலத்தில் புதையுண்டிருப்பதாகவும், 1000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. ஒட்டுமொத்த தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கேரள நிலச்சரிவு போன்று, கடந்த காலங்களிலும் நம் தேசம் நிலச்சரிவுகளை சந்தித்துள்ளது.

மிக சமீபமாக, இரண்டு வாரங்களுக்கு முன் ஜூலை 16 ஆம் தேதி, உத்தர கர்நாடகாவின் அங்கோலா தாலுகாவுக்கு உட்பட்ட சிருர் கிராமத்தில் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்தனர்; மூன்று பேர் மாயமாகினர்.

2023, ஜூலை 19 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம், ராய்காட்டில் கனமழையின் விளைவாக உண்டான நிலச்சரிவு 27 பேரின் உயிரை பலி கொண்டது. 57 பேர் காணாமல போயினர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் நோனி மாவட்டத்தில் ரயில்வே கட்டுமான இடத்தில் 2022, ஜூன் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு 13 பேரின் உயிரை காவு வாங்கியது. 50 பேரை மாயமாக்கியது.

2021, ஜூலை 23 ஆம் நாள், கனமழைவின் விளைவாக, மேற்கு மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் கடற்கரை பகுதியில் உண்டான நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேரின் உயிர்கள் பறிப்போயின.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துட்பட்ட பெட்டிமுடி தேயிலை தோட்ட குடியிருப்பில் 2020, ஆகஸ்ட் 6 ஆம் தேதி, பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் குடியிருப்பில் உறங்கிக் கொண்டிருந்த 65 தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மண்ணில் புதைத்தனர்.

2019 ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையின் விளைவாக, கேரளாவின் லப்பாடி, புட்டுபலா, வயநாடு, பூதானம், மலப்புரம் ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவின் விளைவாக இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்க, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆகஸ்ட் 9 முதல் 28 ஆம் தேதி வரை மேற்கொண்ட மீட்புப் பணியில் மொத்தம் 61 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

உத்தரகண்ட் மாநிலம் கேதர்நாத்தில் 2013 ஜூன் 16 ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தின் விளைவாக கடும் நிலச்சரிவில் சிக்கி, 5,700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இயற்கையின் கோரத்தாண்டவமாக கருதப்பட்ட இத்துயரச் சம்பவத்தில் 4,200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தாலும், வெள்ளத்துக்கு பிந்தைய நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டன.

இதேபோன்று, உத்தரகண்ட் மாநிலம் மப்லா மாவட்டத்துக்குட்பட்ட ஓர் கிராமத்தில் 1998 ஆகஸ்ட் 11 முதல் 17 ஆம் தேதி வரை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 380-க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்தையே காணாமல் போக செய்த இந்த நிலச்சரிவு, இந்தியாவில் அதுவரை நிகழ்ந்த நிலச்சரிவுகளில் மோசமான ஒன்றாக கருதப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங்கில் 1998 இல் அக்டோபர் 4 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு ஆயிரக்கணக்கானோரின் உயிரை காவு கொண்டது. அத்துடன் அப்போது உண்டான வெள்ளப்பெருக்கில் 60 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை 91 பகுதிகளாக துண்டாடப்பட்டது.

அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில், 1948 செப்டம்பர் 18 ஆம் தேதி கனமழையின் விளைவாக ஏற்பட்ட நிலச்சரிவில் 500 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைத்தனர். அத்துடன் ஒட்டுமொத்தமாக ஒரு கிராமமே மண்ணில் புதைந்தது.

இதையும் படிங்க:கேரள நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு; 1000 பேரின் நிலை என்ன? மீட்புப் பணிகள் தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details