மும்பை: 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு இன்று (நவ.20) சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடக்கிறது. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடையும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தேர்தலில் மகாயுதி கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.
மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணியில் காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனா 95 வேட்பாளர்களையும், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.
பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 17 வேட்பாளர்களையும் நிறுத்தி தனித்து போட்டியிடுகின்றன.
பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய மகாயுதி நாடாளுமன்ற தேர்தலில் கடும் சரிவை சந்தித்தது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக ஒன்பது இடங்களிலும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஏழு இடங்களிலும் வென்றன. இதனை சரி செய்யவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் 'முக்யமந்திரி மாஜி லட்கி பஹின் யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின.'