மும்பை:தேவேந்திர பட்நாவிஸ் அல்லது ஏக்நாத் ஷிண்டே ஆகிய இருவரில் யார் மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. மகாயுதி கூட்டணியின் இரண்டு முக்கிய கட்சிகளான பாஜக, சிவசேனா இடையே, யார் எவ்வளவு காலத்துக்கு முதலமைச்சர் பதவி வகிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார், "முதலமைச்சர் பதவியைப் பொறுத்தவரை என்னமாதிரியான திட்டம் மேற்கொள்ளப்படும் என்று இதுவரை எந்த ஆலோசனையும் நடைபெற வில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அவைத் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
அதே போல சிவசேனாவின் அவைத் தலைவராக ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜகவிலும் அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட உ்ள்ளார். இதன் பின்னர் மூன்று அவைத் தலைவர்களும் முதலமைச்சர் பதவி குறிதது இணைந்து ஆலோசனை மேற்கொள்வோம். எங்களுக்கு பெரும்பான்மை பலம் இருப்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இப்போதைக்கு அவசரமாக பதவி ஏற்க வேண்டிய அவசியம் எழவில்லை. எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் பதவி ஏற்பு விழா நடைபெறும்,"என்றார்.