சென்னை:சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கக் கல்லூரி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணைக் குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கலாஷேத்ரா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில், பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானிய குழு சட்டம் உள்ளிட்ட சட்ட விதிகளின் அடிப்படையில் பாலியல் தொல்லைகள் தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது.