தெலங்கானா:ரங்காரெட்டி மாவட்டத்தில் நேற்று (டிச.2) திங்கட்கிழமை சாலையில் வேகமாக வந்த லாரி, ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த காய்கறி வியாபாரிகள் மீது மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவத்திற்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அளுர் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது, சாலையில் சுமார் 50 பேர் காய்கறி விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து வரும் லாரியை கண்ட வியாபாரிகள் அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கியுள்ளனர். ஆனால், ஓடித் தப்பிப்பதற்குள் லாரி சிலரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது.
அதே வேகத்தில் சென்ற லாரி சாலை அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றுள்ளது. மேலும், லாரி மரத்தின் மீது மோதியதில், மரத்தின் கிளைகள் லாரிக்குள் சென்றதால் ஓட்டுநர் இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதாகவும், லாரி மோதிய வேகத்தில் அந்த மரமே விழுந்துவிட்டதாகவும், அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாகவும் சம்பவ இடத்திலிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:உதகையில் கனமழை: வீடு இடிந்து ஒருவர் உயிரிழந்த சோகம்!