சென்னை: இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவானது 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் என மொத்தமாக 96 மக்களவைத் தொகுதிகளிலும் இன்று (மே 13) நடைபெறுகிறது.
அந்த வகையில், தெலுங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகளிலும்; ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளிலும்; உத்தரப் பிரதேசத்தில் 13 மக்களவைத் தொகுதிகளிலும்; பீகாரில் 5 மக்களவைத் தொகுதிகளிலும்; ஜார்கண்டில் 4 மக்களவைத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதேபோல, மத்தியப் பிரதேசத்தில் 8 மக்களவைத் தொகுதிகளிலும்; மகாராஷ்டிராவில் 11 மக்களவைத் தொகுதிகளிலும்; ஒடிசாவில் 4 மக்களவைத் தொகுதிகளிலும்; மேற்கு வங்கத்தில் 8 மக்களவைத் தொகுதிக்கும்; ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மேலும், ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்குக்கான தேர்தலோடு சேர்த்து 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும்; அதேபோல, ஒடிசாவில் மக்களவைத் தொகுதிகளுக்குக்கான தேர்தலோடு சேர்த்து 4 ஒடிசாவின் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று (மே 13) ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், 1.92 லட்சம் வாக்குச் சாவடிகளில் 17.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இதில், 8.97 கோடி பேர் ஆண் வாக்காளர்களாகவும், 8.73 கோடி பேர் பெண் வாக்காளர்களாகவும் மற்றும் 64 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்களாகவும் உள்ளனர்.
இதுமட்டும் அல்லாது, 4ஆம் கட்ட தேர்தலில் மொத்தமாக 1,171 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 170 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். மேலும், 19 லட்சத்துக்கும் அதிகமான வாக்குச் சாவடி அலுவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.