டெல்லி: 18வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டடமாக, தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து, தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், பாஜக கூட்டணி சார்பாக தற்போது வரை தேர்தல் அறிக்கை வெளியிடாமல் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 30) பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதற்கான 27 நபர்கள் கொண்ட குழுவை அறிவித்துள்ளார்.
இந்த பாஜக தேர்தல் அறிக்கை குழுவின் தலைவராக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை குழுவில் 27 பேர் இடம் பெற்றுள்ளனர். தேர்தல் அறிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளராக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக தேர்தல் அறிக்கை குழுவில் மத்திய அமைச்சர்களாக இருந்த பூபேந்திர யாதவ், அர்ஜீன் முண்டா, கிரண் ரிஜிஜீ, அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து பாஜகவின் மூத்த தலைவர்கள் வசுந்திரா ராஜே, சிவ்ராஜ் சிங் சவுகான், ரவிசங்கர் பிரசாத், சுசில் குமார் மோடி, கேசவ பிரசாத் மௌரியா உள்ளிட்டோர் பாஜக தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க:அமலாக்கத்துறையின் தொடரும் ஆம் ஆத்மி வேட்டை! டெல்லி அமைச்சர் கைலாஷ் கெலாட்டுக்கு சம்மன்! - Kailash Gahlot