கொல்கத்தா:திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள பெங்கால் சபாரி பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இரண்டு சிங்கங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த இரண்டு சிங்கங்களில் ஏழு வயதுள்ள சிங்கத்துக்கு அக்பர் என்றும், 6 வயதுள்ள சிங்கத்துக்கு சீதா என்றும் பெயர் சூட்டப்பட்டது.
இந்தப் பெயர்களுக்கு எதிராக தற்போது விஸ்வ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பு நீதிமன்றத்தை நாடியது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த விஸ்வ இந்து பரிஷத், சிங்கத்துக்கு சீதா எனப் பெயர் சூட்டியத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அந்த மனுவில், "மேற்கு வங்க வனத்துறை சிங்கங்களுக்கு வைத்து பெயர், அக்பர் புகழ்பெற்ற முகலாய பேரரசர்களில் ஒருவர், சீதா வால்மீகியின் ராமாயணத்தில் ஒரு பாத்திரம்.
மேலும், இந்து மத வழக்கங்களில் சீதை தெய்வமாக கொண்டாடப்படுகிறார். எனவே, அக்பர் உடன் சீதாவை தங்க வைப்பது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என்பதால் சிங்கங்களின் பெயர் மாற்றப்பட வேண்டும். அக்பரின் துணை சீதையாக இருக்க முடியாது" என்று தெரிவித்து உள்ளது.