வயநாடு:கேரளாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக வயநாடு மலைப் பகுதியில் உள்ள சூரல் மலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு, வீடுகள் அடித்துச் செல்லப்பட்டது. இந்த நிலச்சரிவில் பெண்கள், குழந்தைகள் உட்பட இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், இராணுவம், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அவ்வப்போது ஏற்படும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் இடையூறு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. முண்டகை மற்றும் சூரல் மலை நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இதுவரை 287 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 200க்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டெடுக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, மீட்புப்பணிகளைத் தீவிரப்படுத்தப்பட வேண்டுமானால், ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்கள் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் எனவும், ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலமும் சேதமடைந்துள்ள காரணத்தால், மீட்புப்பணி சவாலாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
தற்போது சேதமடைந்த பாலம் உள்ள இடத்தில் தற்காலிக பெய்லி பாலத்தை ராணுவப் படையினர் தயார் செய்து வருகின்றனர். இந்த தற்காலிக பெய்லி பாலத்தின் கட்டமைப்பு மறுபுறம் வரை இணைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன் தான் மீட்புப் பணியாளர்கள் பேரிடர் பகுதிக்குச் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வயநாடு பகுதிக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று பேரிடர் ஏற்பட்ட இடத்திற்குப் பார்வையிட முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் தலைமைச் செயலாளர் வேணு உள்ளிட்டோர் வருகை தரவுள்ளனர். பின்னர், இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் கேரளா முதலமைச்சர் தலைமையில் நடைபெறவுள்ளது. அதுமட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று வயநாடு வரவுள்ளதாகவும், தொடர்ந்து நிவாரண முகாம்களைப் பார்வையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: "பழி சுமத்த இது நேரமல்ல”.. அமித்ஷா பேச்சுக்கு பினராயி விஜயன் பதில்.. 249 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!