கொச்சி : கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் (வயது 33), ஆப்கானிஸ்தான் சென்று பயஙகரவாத குழுவில் இணைந்து தீவிரவாத பயிற்சி பெற்று உள்ளார். மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 253 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட ஷக்ரன் அசிமின் பின் தொடர்பாளராக ரியாஸ் அபூபக்கர் இருந்ததாக கூறப்படுகிறது. அதேபோன்று கேரளாவிலும் தொடர் தற்கொலை படை தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய நிலையில், ரியாஸ் அபூபக்கர் கடந்த 2019ஆம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் ரியாஸ் அபூபக்கரை 18வது குற்றவாளியாக அறிவித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் 15 இளைஞர்கள் உள்ளிட்டோரை கைது செய்து விசாரித்து வந்தனர். இளைஞர்களுக்கு ஷக்ரன் அசிமின் வீடியோக்களை போட்டு காண்பித்து மூளைச் சலவை செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ரியாஸ் அபூபக்கர் மீது என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.