காசர்கோடு:கேரளாவில் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இம்மாதத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1 முதல் 26ஆம் தேதி வரை 2.54 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சமீபத்திய டெங்கு மற்றும் எலி காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.
அம்மாநிலத்தில் இதுவரை 1,899 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். எலி காய்ச்சலால் 339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளத்தில் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் மிகவும் சாதாரண நோய் பாதிப்பாக மாறி உள்ளது. தினசரி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புகளுக்காக மருத்துவமனைகளுக்கு வந்து செல்கின்றனர்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தில் அதிக காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் முறையே 2,165 மற்றும் 2,118 மற்றும் 1,725 நோயாளிகள் காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக புகார்.. நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் ஆணை!
குளிர், தொண்டை புண், இருமல், உடல் வலி மற்றும் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் சோர்வு ஆகியவை நோய் பாதிப்பின் பொதுவான அறிகுறிகளாக உள்ளன. இது தவிர, மஞ்சள் காமாலை நோயும் பதிவாகியுள்ளது. மருத்துவக் கவனிப்புக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் முறைப்படி மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
எனினும், பல குடும்ப சுகாதார நிலையங்கள், பணியாளர் பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றன. சமூக சுகாதார மையங்களில் (சிஎச்சி) பெரும்பாலும் இரு மருத்துவர்கள் தேவை உள்ள நிலையில், ஒரு மருத்துவருடன் மட்டுமே செயல்படுகின்றன. இதன் காரணமாக மருத்துவ சேவை கிடைப்பதில் சிரமம் நிலவுகிறது. குறிப்பாக, பிற்பகலில் இந்தச் சூழல் நிலவுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை இந்த நிலைமை தொடர்கிறது. இந்நிலையில் 'ஆர்த்ரம் மிஷன்' மூலம் குடும்ப சுகாதார மையங்களை மாற்றியமைத்து பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கியுள்ளது. ஆனாலும், செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் போதிய அளவில் இல்லாதது இந்த முயற்சிகளுக்கு இடையூறாக உள்ளது.
கூடுதலாக ஆய்வக வசதிகள் உள்ள நிலையில், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையானது சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கு குறிப்பிடத்தக்க தடையாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தின் பணியாளர் அட்டவணை மாதிரி, கடந்த 1961ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்படவில்லை.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்