பெங்களூரு:மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ வழக்கில் அவரது வீட்டில் முன்னாள் பணியாற்றிய பணிப் பெண்னை கடத்தியதாக வழக்குப் பதிவு செய்த பெங்களூரு கேஆர் நகர் போலீசார் அவரது தந்தை எச்டி ரேவண்ணா மற்றும் சதீஷ் பாபன்னா ஆகியோரை கைது செய்தனர்.
பணிப் பெண்ணை கடத்திய வழக்கில் எச்டி ரேவண்ணாவை முதல் குற்றவாளியாகவும், சதீஷ் பாபன்னாவை இரண்டாவது குற்றவாளியாகவும் முதல் தகவல் அறிக்கையில் கேஆர் நகர் போலீசார் குறிப்பிட்டனர். பின்னர் இந்த வழக்கில் இருந்து எச்டி ரேவண்ணா ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில், பணிப் பெண்ணை கடத்திய வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி எச்.டி ரேவண்ணாவின் மனைவியும் முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்னாவின் தாயுமான பவானி ரேவண்ணா நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு கடந்த ஜூன் 14ஆம் தேதி நீதிபதி கிருஷ்ணா எஸ் திக்ஷித் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு விவாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று (ஜூன்.18) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பவானி ரேவண்ணாவுக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதி கிருஷ்ணா எஸ் திக்ஷித் தீர்ப்பு வழங்கினார்.