பெங்களூர்: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக நேற்று (மார்ச் 20) வெளியிட்டது. அந்த அறிக்கையில், மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று (மார்ச் 21) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "அவர் மாநிலத்தை அவர் பார்த்துக்கொள்ளட்டும். நான் கர்நாடக மாநிலத்தின் நீர்ப்பாசனத் துறையின் பொறுப்பை பெற்றிருப்பதே, மேகதாது அணையைக் கட்டுவதற்காகத்தான்.
இதற்காக அவர் போராடட்டும். ஆனால், காவிரி ஆணையம் முன்பு வழக்கு வர உள்ளது. காவிரி மேலாண்மைக் குழுவுக்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினை நன்கு தெரியும். அதில் கர்நாடகாவிற்கு நியாயம் கிடைக்கும். அங்கு மட்டுமல்ல, அனைத்து நீதிமன்றங்களிலும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இதுமட்டுமல்லாது, மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை அல்ல. அது, திமுகவின் கட்சி அறிக்கை மற்றும் அவர்களின் அரசியல் விருப்பம் ஆகும்" என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ச்சியாக பேசிய டி.கே.சிவக்குமார், "மேகதாது திட்டம் கர்நாடகாவுக்கு மட்டும் அல்ல, இரு மாநிலங்களுக்கும் பலன் தரும் திட்டம். நாடு முழுவதும் உள்ள மக்கள் கர்நாடகாவில் உள்ளனர். ஆகவே, இந்த திட்டம் முழு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும். எங்கள் சகோதரர்களும் பெங்களூரில் உள்ளார்கள், அவர்களுக்கும் நல்லது நடக்கும் வகையில் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு பேசும் நல்ல காலம் விரைவில் வரும்" என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியாகச் செயல்படும் நிலையில், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்படும் என குறிப்பிட்டதற்கு, கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதும், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இது குறித்து கருத்து தெரிவித்ததும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க:“உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு குட்டு வைத்துள்ளது” - அமைச்சர் ரகுபதி பேச்சு! - Ponmudi As A Minister