பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று விதன்சவுதாவில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சித்தராமையா, “காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஜூலை 12 முதல் 30 வரை தினமும் ஒரு டிஎம்சி வீதம் 20 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவிற்கு ஜூலை 11 அன்று பரிந்துரைத்தது. ஜூன் மாதத்தில் 9.14 டிஎம்சி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட வேண்டும்.
ஜூலையில் 31.24 டிஎம்சி தண்ணீர் என மொத்தம் 40.43 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும். இதுவரை 5 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால், ஆணையம் பரிந்துரைத்தது போல் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. தற்போது மைசூரில் உள்ள கபினியில் இருந்து 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே, 8,000 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு கபினியில் இருந்து திறந்துவிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை மழைப்பொழிவு இல்லாமல் இருந்தால் தண்ணீரின் அளவு குறைக்கப்படும். அதேநேரம், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் மேல்முறையீடு செய்வதற்கும் முடிவெடுத்துள்ளோம். தற்போது கபினி நீர்த்தேக்கத்தில் 96 சதவீதம், ஹராங்கி 76 சதவீதம், ஹேமாவதி 56 சதவீதம் மற்றும் கேஆர்எஸ் 54 சதவீதம் அளவு என மொத்தமுள்ள 4 அணைகளிலும் 63 சதவீதம் நீர் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் டிகே சிவகுமார், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஆர் அசோகா, முன்னாள் முதலமைச்சர் சதானந்த கவுடா, மைசூர் எம்பி யதுவீர் வடியர், பாஜக எம்எல்சி சிடி ரவி, ஜேடிஎஸ் தலைவர்கள் தேவ கவுடா, சரவண் மற்றும் அமைச்சர்கள் ஜி பரமேஸ்வர், கே.எச். முனியப்பா, சலுவரயசுவாமி, கேஜே ஜார்ஜ், தினேஷ் குண்டுராவ், எச்சி மஹாதேவப்பா, கிருஷ்ணா பியர்கவுடா, கே வெங்கடேஷ், போஸ்ராஜூ மற்றும் மாநில நீர் விவகாரங்கள் சட்டப் பிரிவின் தலைவர் மோகன் கதராகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க கர்நாடகா மறுக்க என்ன காரணம்? விளக்கமும்... விவகாரமும்..