ஸ்ரீநகர் (ஜம்மு -காஷ்மீர்):90 தொகுதிகள் கொண்ட ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றத்துக்கு கடந்த செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பின்னர், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால், தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு இத்தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இத்தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த தேசமும் உற்று நோக்கியது.
காங்கிரஸ் - தேசிய மாநாட்டுக் கட்சி ஓர் கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை தனித்தும் போட்டியிட்டதால் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவியது. 28 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 415 பேர் களம்கண்ட இத்தேர்தலில் மொத்தம் 63.45 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு பிறகு, இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப சுற்றுக்கள் முதலே தேசிய மாநாட்டுக் கட்சி பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்தது. அதற்கு அடுத்ததாக பாஜக குறிப்பிடத்தக்க இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. மாலை 4:30 மணியளவில் 90 தொகுதிகளுக்கான வெற்றி நிலவரம் ஏறத்தாழ உறுதியானது. இதன்படி, தேசிய மாநாட்டு கட்சி 42 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரல் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக 29 இடங்களை கைப்பற்றி உள்ளது. முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மக்கள் மாநாட்டுக் கட்சி தலா ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் ஏழு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். ஜம்மு -காஷ்மீரில் ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 46 இடங்கள் தேவை என்ற நிலையில், 42 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ள தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் ஆதரவுடன் ஜம்மு -காஷ்மீரில் ஆட்சியமைப்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தேர்தல் முன்னணி நிலவரங்கள் தெரிய வந்த பிறகு, அக்கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா உதிர்த்த வார்த்தைகள் இதனை உறுதி செய்துள்ளது.
"சிறப்பு மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஜம்மு -காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே இத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. தங்களது வாக்குரிமையை செலுத்திய ஒவ்வொரு வாக்காளருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒமர் அப்துல்லா, ஜம்மு -காஷ்மீரின் அடுத்த முதல்வராக விரைவில் பொறுப்பேற்பார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்துவோம்" என்று செய்தியாளர்களிடம் உற்சாகமாக கூறினார் ஃபரூக் அப்துல்லா.