பெங்களூரு:கர்நாடகாவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி என்பவர், பெங்களூரு நகர சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், கர்நாடக உள்துறை செயலாளர் மற்றும் காவல்துறை ஆகியோர், ஜெயலலிதாவிற்குச் சொந்தமான பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கான ரூ.5 கோடியை கர்நாடக அரசுக்கு தமிழ்நாடு அரசு வரைவோலையாக (DD - Demand Draft) வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கிரன் எஸ்.ஜவலி என்பவர் சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்தார். இதனையடுத்து 2014, செப்டம்பர் 17 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதோடு கைப்பற்றப்பட்ட ஜெயலலிதாவின் விலைமதிப்புமிக்க சொத்து பொருட்களை ரிசர்வ் வங்கி, எஸ்பிஐ அல்லது பொது ஏலம் மூலம் விற்கவும், அபராதத் தொகையை மாற்றி அமைக்கவும் வேண்டும் என உத்தரவிடப்பட்டது.