ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று(செப்.25) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. பின்னர் 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவானது. மொத்தமாக 57.03% வாக்குப்பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
26 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 239 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் படி, மொத்தம் 3,502 வாக்குச்சாவடிகள் நிறுவப்பட்டது. அவற்றில் 1,056 நகர்ப்புற வாக்குச்சாவடிகள், 2,446 கிராமப்புற வாக்குச்சாவடிகள் ஆகும். இந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இணையவழியில் (வெப்காஸ்டிங்) கண்காணிக்கப்பட்டது.
இத்தேர்தலில் வழக்கமான வாக்குச் சாவடிகள் தவிர, முழுவதும் பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச் சாவடிகள் (இளஞ்சிவப்பு வாக்குச் சாவடிகள்) - 26, மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பணிபுரியும் வாக்குச் சாவடிகள் - 26, இளைஞர்கள் மட்டும் பணிபுரியும் வாக்குச் சாவடிகள் - 26, எல்லை வாக்குச் சாவடிகள் - 26, பசுமை வாக்குச் சாவடிகள் - 26 மற்றும் தனித்துவமான வாக்குச் சாவடிகள்- 22 என மொத்தம் 157 சிறப்பு வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்தது.