ஜெய்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் எரிவாயு டேங்கர் லாரி இன்னொரு வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் தீகாயம் அடைந்தோர் ஜெய்பூரில் உள்ள சவாய் மான் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவருவோரில் 10 பேரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்களின் உடலில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக தீ காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் ஈடிவி பாரத்திடம் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 14 பேரில் 9 பேரின் உடல்கள் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. ஹர்லால், அனிதா மீனா; ஷாபுதீன்; மகேந்திரா, ஷாஹித், ஃபைஜான்; கோவிந்த், மெஹ்ராலி , ராதேஷ்யாம் சௌத்ரி ஆகிய 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆவர். மீதி ஐவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எப்படி விபத்து நடந்தது?ஜெய்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலையில் டிசம்பர் 20ஆம் தேதி அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி ப ப்ளிக் ஸ்கூல் முன்புறம் பாங்க்ரோடா பகுதியில் எரிவாயு டேங்கர் லாரி சாலையின் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறத்துக்கு செல்ல யு டர்ன் வளைவில் திரும்பியது. எதிர்புறத்தில் வேகமாக வந்த வாகனம் எரிவாயு டேங்கர் லாரி வருவது தெரியாமல் பலமாக மோதியது.
ஜெய்பூர் எரிவாயு டேங்கர் விபத்தில் தீ பற்றி எரியும் வாகனங்கள் (iImage credits-ETV Bharat) மோதிய வேகத்தில் எரிவாயு டேங்கர் லாரி வெடித்து தீப் பற்றியது. என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள், எரிவாயு டேங்கர் லாரியின் பின்னால் வந்து கொண்டிருந்த வாகனங்கள் மீதும் மளமளவென தீபரவியது. இதில் 29 லாரிகள், டேங்கர்கள் உட்பட 40 வாகனங்கள் தீயில் கருகின. இரண்டு பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட 11 வாகனங்களும் தீயில் கருகின.
எரிவாயு டேங்கர் வெடித்த வேகத்தில் அதில் இருந்து எரிவாயு தீயுடன் பரவியது. எனவே அடுத்தடுத்து பின்னால் இருந்த வாகனங்களில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு வெளியேறவும் முடியவில்லை, எனவே அவர்கள் உயிரிழக்க நேரிட்ட பரிதாபம் நிகழ்ந்தது. நெடுஞ்சாலையை ஒட்டி இருந்தவர்கள் உடனடியாக அங்கு திரண்டு தீயை அணைக்க முயன்றனர். தீகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் 25க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எரிவாயு வெளியேறியது எப்படி?:விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்பூர் காவல் ஆணையர் பிஜூ ஜார்ஜ் ஜோசப், "எரிவாயு டேங்கர் லாரி மீது இன்னொரு வாகனம் மோதிய வேகத்தில் எரிவாயு டேங்கர் லாரியில் எரிவாயு வெளியேறும் துளையை மூடியிருந்த மூடி சேதம் அடைந்தது. இதனால், எரிவாயு மிக வேகமாக வெளியேறி தீ பிடிப்பதற்கு காரணமாக அமைந்து விட்டது. எரிவாயு டேங்கர் லாரி வெடித்ததால் நேரிட்ட தீயில் 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்த காட்சி ஜெய்பூர்-அஜ்மீர் நெடுஞ்சாலை பகுதி ஒரு நரகம் போல காட்சியளித்தது. தீ அணைக்கப்பட்ட பின்னர் அனைத்து வாகனங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. பினனர் இரவில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது,"என்றார்.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி: இந்த விபத்து குறித்து பேசிய, ஒரு பள்ளி வேனின் ஓட்டுநர், நான் குழந்தைகளை ஏற்றுவதற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்தை பார்த்தேன். தீ விபத்து நேரிட்ட வாகனங்களில் இருந்து உடலெல்லாம் தீ பரவிய நிலையில் ஒருவர் உயிர் பிழைக்க ஓடியது அச்சம் தருவதாக இருந்தது. அனைத்து வாகனங்களும் ஒரே நேரத்தில் தீ பற்றியதில் ஒரு கி.மீ தூரம் வரை புகை மண்டலம் பரவியிருந்தது. தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ்கள் உடனே வந்த போதிலும் அருகில் போக முடியாத அளவுக்கு தீ பரவிக் கொண்டிருந்தது. எனவே உடனே தீயணைக்கும் பணி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது,"என்றார்.
பலர் படுகாயம்: இந்த விபத்தில் தீகாயம் அடைந்தோருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறினர். படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் தீகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவு ஒன்று உடனடியாக உருவாக்கப்பட்டுள்ளது.
43 பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்ற பின்னர் வீட்டுக்கு திரும்பினர். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும், காயம் அடந்தோருக்கு ரூ.1 லட்சம் உதவியும் வழங்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு,பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விபத்தில் உறவினர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்பதை அறிய ஜெய்பூர் போலீசார் உதவி எண்களை அறிவித்துள்ளனர். 91-66-347-551, 87-64-688-431 மற்றும் 73-00-363-636 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.