ஆனந்த்நாக்:ஆனந்த்நாக் பகுதியில் இருந்து காணாமல் போன ராணுவ வீரரின் உடல் குண்டுகள் துளைக்கபட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனந்த்நாக்கின் ஷா பகுதியில் இருந்து செவ்வாய்கிழமையன்று காணாமல் போன ஹிலால் அகமது பட் என்ற ராணுவ வீரர், உத்ராசூ பகுதியில் உள்ள சங்க்லான் வனப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ராணுவ வீரர் காணாமல் போனதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நேற்று இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராணுவத்தின் ஸ்ரீநகர் சினார் கார்ப்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கஸ்வான் வனப்பகுதி, கோகர்நாக் ஆகிய பகுதிகளில் 8 ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் போலீசார், இதர பாதுகாப்பு முகமைகளுடன் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்," என கூறப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளால் இரண்டு வீரர்கள் கடத்தப்பட்டதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டது. தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பி வந்த ராணுவ வீரரின் பெயர் ஃபையாஸ் அகமது ஷேக் என்றும் தெரியவந்துள்ளது. அவர் தப்பி வரும்போது தீவிரவாதிகளுடன் சண்டையிட்டதால் காயமடைந்திருப்பதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அவர் ஶ்ரீநகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.