பலூர்கட் :குடியுரிமை திருத்த சட்டத்தில் மக்களை தவறான வழியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழிநடத்துவதாகவும், அவரது வாக்கு வங்கியான ஊடுருவல்காரர்களுக்கு தேவையான வசதிகளை மம்தா பானர்ஜி செய்து கொடுப்பதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டார். பலூர்கட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார்.
மேலும், பூபதிநகர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சி நடப்பதாகவும் அதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தில் மேற்கு வங்க மாநில மக்களை மம்தா பானர்ஜி தவறான பாதையில் வழிநடத்துவதாக குறிப்பிட்டார்.
மேலும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால் குடியுரிமையை இழக்க நேரிடும் என மம்தா பானர்ஜி கூறுவதாகவும் அகதிகளாக வரும் மக்கள் குடியுரிமை பெறுவதை அவர் ஏன் எதிர்க்கிறார் என தெரியவில்லை என அமித் ஷா கூறினார். அகதிகள் அனைவரும் அச்சமின்றி விண்ணப்பத்தை நிரப்பலாம் என்றும் அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
சந்தேஷ்காலி வன்முறை சம்பவம் குறித்து பேசிய அமித் ஷா, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெட்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் மக்கள் யரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் மீண்டும் மாநிலத்தில் சந்தேஷ்காலி போன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாஜகவுக்கு வாக்களிக்குமாறும் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை காப்பாற்றும் நோக்கில் என்ஐஏ அதிகாரிகள் மீது மம்தா பானர்ஜி தாக்குதல் நடத்தியதாகவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் இது வெட்கக்கேடானது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
இதையும் படிங்க :பாஜக 10வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: ரேபரலியில் தொடரும் சஸ்பென்ஸ்? - Lok Sabha Election 2024