டெல்லி: தமிழகத்தின் விக்கிரவாண்டி, இமாச்சல பிரதேச மநிலத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க், மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்ஷின், பாக்டா, மணிக்தலா உள்பட 7 மாநிலங்களில் 13 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (ஜூலை.13) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இமாச்சல பிரதேசத்தின் தேஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹோசியார் சிங் முன்னிலை வகித்து வருகிறார். அதேபோல், மத்திய பிரதேசம் மாநிலம் அமர்வாரா தொகுதியில் பாஜக வேட்பாளர் கமலேஷ் பிரதாப் ஷா முன்னிலை வகிக்கிறார்.
இமாச்சல பிரதேசம் ஹமிர்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா முன்னிலை வகிப்பதாக இந்திய தேர்தல் அணையம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்தின் மங்களர் மற்றும் பத்ரிநாத் தொகுதிகளில் முறையே காங்கிரஸ் வேட்பாளர்கள் காஸி நிஜாமுதின், லகாபத் சிங் புட்டோலா ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர்.
மேற்கு பஞ்சாப்பின் ஜலந்தர் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொகிந்தர் பகத் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல் பீகார் மாநிலத்தில் உள்ள ருபாளி தொகுதியில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கலாதர் பிரசாத் மங்கள் முன்னிலை வகித்து வருகிறார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்த உள்ள நான்கு தொகுதிகளில் பகதா, மணிக்தலா, ராய்கஞ்ச ஆகிய தொகுதிகளில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். அமரவரா தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். நாடு முழுவதும், மொத்தம் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்திய கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. பாஜக இரண்டு இடத்திலும், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:7 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! வெற்றி நிலவரம் சொல்வது என்ன? - 7 states ByElection Result 2024