ஜம்மு:இந்தியா கூட்டணியின் தலைமை பதவி, அதன் கொள்கைகள் குறித்து தெளிவு குறைவாக உள்ளது. இந்த கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும் என்றால், இப்போதைக்கு கூட்டணியை கலைத்து விடலாம் என்றும் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரும், இந்தியா கூட்டணி தலைவர்களில் ஒருவருமான உமர் அப்துல்லா, களத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் பாஜகவுக்கு எதிராக எவ்வளவு தீவிரமாக பணியாற்றப்போகின்றோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுற்ற பின்னர் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும். இந்த கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டும்தான் என்றால், இதனை கலைத்து விடலாம். நாம் தனித்தனியே பணியாற்றலாம். சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் இந்த கூட்டணி பொருந்தும் என்றால், அனைவரும் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
என் நினைவில் உள்ளவரை கூட்டணிக்கான காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கவில்லை. இந்தியா கூட்டணி கூட்டம் கூட்டப்படவில்லை என்பதுதான் விஷயம். கூட்டணியின் முக்கியமான தலைமை, கட்சி அல்லது எதிர்கால உத்திக்கான கொள்கை ஆகியவற்றில் தெளிவு இல்லை. இந்த கூட்டணி தொடர்கிறதா என்பதில் தெளிவில்லை. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த உடன் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அப்போதுதான் இதில் தெளிவு பிறக்கும்.