தெலங்கானா: உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடக்கும் வேளையில், தானம் செய்யப்பட்ட உறுப்பு இருக்கும் மருத்துவமனையில் இருந்து உறுப்பு மாற்ற வேண்டி காத்திருக்கும் நோயாளி இருக்கும் மருத்துவமனைக்கு அதை கொண்டு செல்வது பெரும் சவாலான காரியம்.
போக்குவரத்தை சீர்செய்து சாலை மார்க்கமாகவோ, தனி விமானங்கள் உதவியுடனோ இந்த வேலை தக்க சமயத்தில் செய்து முடிக்க வேண்டும். ஆனால், தெலங்கானா மாநிலத்தில் மெட்ரோவில் இதயம் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை
காமினேனி மருத்துவமனை (Kamineni Hospitals) தலைநகர் ஹைதராபாத்தின் எல்.பி. நகர் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் இருந்து தானமாகக் கிடைத்த இதயத்தை, லக்டி-கபூல் எனும் இடத்தில் இருக்கும் கிலென் ஈகில்ஸ் குளோபல் மருத்துவமனைக்குக் (Gleneagles Global Hospital) கொண்டு செல்ல வேண்டும். இரண்டு மருத்துவமனைகளுக்கும் இடையிலான தூரம் 13 கிலோமீட்டர்கள் ஆகும்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில், சாலை மார்க்கமாக இருதயத்தைக் கடத்துவது எளிதல்ல என நினைத்து, மருத்துவக் குழு புதிய திட்டம் வகுத்துள்ளது. அதன்படி, மெட்ரோ நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்ற அவசர நிலையில் செயல்படுத்தப்படும், பச்சை நிற மெட்ரோ வழிப்பாதையில் (Green Corridor) எல்.பி நகர் முதல் லக்டி-கபூலுக்கு இதயத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.